Saturday, December 2, 2017

புள்ளி விபரமல்ல, புனைவுமும் அல்ல . . .பின்னே . . .





அடுத்த வருட சென்னை புத்தகத் திருவிழா வரும் முன்பு இந்த ஆண்டு வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் நிலுவையில் உள்ள புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட Stock Clearance  என்று சொல்லலாம்.

அப்படி விடுபட்ட ஒரு நூலை படிக்கிற போதுதான்  அது பொருளாதார புள்ளிவிபர நூல் அல்ல, புனைவு, இல்லையில்லை, புனைவு போல தோற்றமளிக்கும் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு என்று புரிந்து கொண்டேன். ஜனவரி மாதமே வாங்கிய நூலை   இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

உடனடியாக அந்த நூல் உங்கள் பார்வைக்கு

நூல் அறிமுகம் :   நவம்பர், 8,  2016

ஆசிரியர்            : எஸ்.அர்ஷியா,

வெளியீடு           : எதிர் வெளியீடு
                                  பொள்ளாச்சி

விலை                  : ரூபாய் 90.00


நூலின் தலைப்பே உள்ளடக்கம் என்னவென்பதை சொல்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் கறுப்பு தினமான செல்லா நோட்டு அறிவிப்பு நாளான 8 நவம்பர் 2016 ஐ மறக்க முடியுமா? அந்த நாளையும் அதன் பின்பு தொடர்ந்த துயரங்களையும்?

சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை பொய்யையே வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு மோசமான அரசின் மிக மோசமான முடிவு எப்படி புரட்டிப் போட்டது என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம். அந்த பாதிப்புக்களை புனைவின் வடிவில் சொல்கிற நூல் இது.

தன் வருங்கால மனைவி தமிழரசியோடு பேசக்கூட நேரமில்லாமல் ஒரு முதலாளியின் புதிய ப்ராஜக்டுக்கான வரைவு அறிக்கையை மும்முரமாய் தயார் செய்து கொண்டிருக்கிற மதுக்குமார், திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற தன் மகள் தமிழரசியின் விருப்பத்தை நிறைவேற்ற பணம் ஏற்பாடு செய்து விட்டு திருமண வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டுள்ள தந்தை வேணுகோபால் ஆகியோரைச் சுற்றி சுழல்கிறது கதை.

நவம்பர் மாதம் இருபத்தி ஏழாம் தேதி திருமணம் நடைபெற நிச்சயிக்கப் பட்டு பத்திரிக்கைகள் வினியோகிக்கும் வேளையில்தான் இடியாய் இறங்குகிறது அச்செய்தி. தொலைக்காட்சியில் பிரதமர் தோன்றி ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செல்லாது என்று அறிவிக்கையில்  அதன் விளைவு என்ன ஆகும் என்பது அத்தந்தைக்கு அப்போது புரியவில்லை.

ஒரு நாள் இடைவெளிக்குப் பின்பு வங்கிக்கு செல்கையில் அங்கே திரண்ட மக்கள் கூட்டம்தான் நிலைமையின் தீவிரத்தை அவருக்கு உணர்த்துகிறது.

வங்கிகள் முன்பான நீண்ட வரிசைகள், அரசு நடவடிக்கையை நியாயப்படுத்த எல்லையில் உள்ள ராணுவ வீரர்களை துணைக்கு அழைக்கும் ஆதரவாளர்கள், செல்லா நோட்டை கமிஷனுக்கு மாற்றித் தரும் தரகர்கள், அரசு நிறுவன வசூல்கள் அமைச்சர்கள் வீடுகளுக்கு செல்வது, மை வைத்து மக்களை அசிங்கப்படுத்துவது,  என்று நாம் அனுபவித்த இன்னல்கள் எல்லாமே கதையின் காட்சிகளாக கண் முன்னே விரிகிறது.

அரசின் நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒரு போதும் உதவாது என்பதையும் கதையில் நடக்கும் விவாதங்கள் மூலம் ஆசிரியர் அழுத்தமாக நிறுவுகிறார்.

வேணுகோபால் தன் கைவசம் இருந்த பணத்தை மாற்றினாரா, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளன்று நடந்ததா? என்பதையெல்லாம் நூலை படித்து தெரிந்து கொள்க.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாம் அனுபவித்த சிரமங்களை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ள இந்த நூல் உதவுகிறது. புனைவு என்ற வடிவானதால் இன்னும் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது.

நாம் பட்ட கஷ்டங்களை நினைவில் கொள்வது மட்டும் முக்கியமில்லை. அதற்குக் காரணமானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது என்பது அதை விட முக்கியம்.

தோழர் எஸ்.அர்ஷியா அவர்களுக்கு பாராட்டுக்கள்.






2 comments:

  1. அவசியம் வாங்கிப் படிப்பேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. Ur daily reading hours please.hope you r the fastest reader.

    ReplyDelete