Monday, January 15, 2018

மிகப் பெரிய நஷ்டம் . . .




கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்திருக்கும். நெய்வேலியில் பணியில் இணைந்த காலத்தில் அப்போது சங்கத்தை வழிநடத்தி வந்த தோழர் சுப்பராயன் அவர்கள் ஒரு மாலை வேளைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். ஏதோ ஒரு இலக்கிய அமைப்பின் (பெயர் நினைவில் இல்லை) துவக்க விழா அது. அங்கேதான் பத்திரிக்கையாளர் ஞானி அவர்களின் உரையை முதன் முதலாக கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

அது வரை நான் பிரமிப்போடு பார்த்து வந்த ஒரு பிம்பம் தகர்ந்தது அக்கூட்டத்தில்தான். வேலை நிறுத்தப் போராட்டம் செய்த இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர்களோடு நிர்வாகத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த வந்ததும் பணி நீக்கம் செய்வோம் என்று மிரட்டியதும் அருண் ஷோரி என்ற தகவலை அவர் விளக்கியபோது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. 

அதன் பிறகு ஞானி அவர்களோடு பரிச்சயம் என்பது அவருடைய எழுத்துக்களோடுதான். பலவற்றை ஏற்றுக் கொள்ளவும் சிலவற்றோடு முரண்பட்டாலும் அவரது எழுத்துக்கள் என்றுமே பிடித்தமானதுதான். 

புத்தக விழாக்களுக்கு செல்லும்போது அவருடைய "ஞானபானு" ஸ்டாலுக்கு தவறாமல் செல்வது வழக்கம். புத்தகங்கள் வாங்குவதைத் தவிர அன்றாடம் அவர் நடத்தும் தேர்தலில் வாக்கு போடுவதும் வழக்கமாக இருந்தது.  அவர் வரைந்த பாரதி ஓவியம் என் மேஜையின் கண்ணாடிக்கு கீழே உள்ளது. 

முகநூல் மூலம் பரிச்சயம் இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகம் செய்து கொண்டு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். எங்களின் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மீது அவருக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. அதன் பின்பு சென்ற தருணங்களில் அவரது உடல்நிலை பற்றி விசாரித்து வந்துள்ளேன். 

ஆலந்தூர் தொகுதியில் அவர் நின்ற போது அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்தபோதும் கூட மனம் அவரது வெற்றிச் செய்தியை விரும்பியது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை புத்தக விழாவிற்குச் சென்ற போதும் "ஞானபானு"  ஸ்டாலுக்குச் செல்கையில் அவர் அங்கே இல்லை. ஒருவேளை டயாலிஸிஸ் செய்து கொள்ள சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் எழுதிய "பலூன் நாடகம்" மட்டும் வாங்கி வந்தேன். 

அவருக்கான அஞ்சலியாக அந்த நூலை முழுவதும் படித்து முடித்தேன்.   நாளை  அது  பற்றி எழுதுவேன்.

இடதுசாரி சிந்தனையாளராக, துணிச்சலான ஊடகவியலாளராக, பல்வேறு புதிய முயற்சிகள் செய்பவராக, மதவெறி எதிர்ப்பாளராக, எளிய மக்களின் ஆதரவாளராக திகழ்ந்த தோழர் ஞானி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலியும் செவ்வணக்கமும். 

நீங்கள் வரைந்த பாரதி ஓவியத்தில் எப்படி அவரது பார்வை கூர்மையாக இருந்ததோ, அது போலவே உங்கள் எழுத்துக்களும் கூர்மையானது. 

வெறி பிடித்த கூட்டம் மக்களை பிளவுபடுத்த முயலும் இச்சூழலில் உங்கள் எழுத்துக்களை இழப்பது சமூகத்திற்கு பெரிய நஷ்டம்.






8 comments:

  1. அவர் பெயர் ஞானி அல்ல
    ஞாநி

    அவர் பல தடவை இந்த திருத்தத்தை கூறி இருக்கின்றார்

    ReplyDelete
  2. ஞானி என்ற பெயரில் வேறொரு தமிழறிஞர்(மார்க்சசியம், தமிழ்தத்தேசியம்) இருக்கிறார்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ செத்துப் போனா தகவல் சொல்லச் சொல்லு.
      உனக்கும் அஞ்சலி எழுதறேன்.
      ஓ நீதான் அனாதைப் பிணமாச்சே!
      முனிசாபாலிடி குப்பை வண்டியிலதான்
      உன் இறுதி ஊர்வலமே போகும்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. அஞ்சலிகள்.
    போட்டு தள்ள வேண்டும் கொலை வெறி ஆர்வளர்கள் பலர் வாழ்கின்ற ஊரில் மரண தண்டணை எதிர்பாளராக இருந்தது, தனதுடலை தானம் செய்தது போன்ற மேலதிக பல சிறப்புக்களை கொண்டவர்.
    இலங்கை விஷயத்தில் அரசியல்வாதிகள் போன்று இனவாத ரீதியில் காற்று அடிக்கும் பக்கம் அடிச்சு விடாமல், சரியான கருத்துக்களை துணிச்சலுடன் தெரிவித்தவர்.

    ReplyDelete
    Replies
    1. இலங்கை விடயத்தில் எவ்வகையான நிலைப்பாடு கொண்டிருந்தார் என்பதை வேக நரி அவர்களே விளக்க முடியுமா ?

      Delete
  5. ஞாநி மிகவும் நல்ல விஷயமாக எல்டிடிஈ என்ற வன்முறை பிரிவினை அமைப்புக்கு எதிராக இருந்தார்.

    ReplyDelete