Sunday, January 14, 2018

நால்வர் கலகம் நன்மையில் ???????



உச்ச நீதிமன்றக் கோட்டைக்குள் குத்து வெட்டாய் நான்கு மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக பொங்கி எழுந்து இரண்டு நாட்களாகிவிட்டது. தலைமை நீதிபதி தன் மீது சுமத்தப்பட்டது அபாண்டமானது என்று சொல்லக் கூட  இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்.  மோடியின் முதன்மைச் செயலாளர் தீபக் மிஸ்ரா வீட்டிற்கு போன ஒரு சம்பவத்தைத் தவிர பொதுவாக ஆளும்கட்சி பதுங்கிக் கொண்டுதான் உள்ளது. வழக்கமான வசவு இயந்திரங்கள் கூட அமைதியாக உள்ளது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் இது முதல் முறை என்று பலரும் சொல்கின்றனர். 

நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுக்களை இன்னொரு நீதிபதி சொன்னது என்பது நடந்துள்ளது. 

ஆம் சி.எஸ்.கர்ணன்.

அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக அவமதிப்பு வழக்கு என்று திசை திருப்பி சிறைக்கு அனுப்பி விட்டார்கள். 

இப்போது கலகக் கொடி உயர்த்தியுள்ளவர்கள் நால்வரும் மூத்த நீதிபதிகள். இதுவரை எந்த சர்ச்சையோ அல்லது கறையோ இல்லாதவர்கள். 

அவர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகளில் சரக்கு இருக்கிறது. (திரு கர்ணன் அவர்கள் பிரச்சினையை கையாண்டதில் மிகவும் சொதப்பினார் என்பதும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சும்மா அடித்து விட்டது போன்ற தோற்றம்தான் உருவானது)

வழக்குகளை நீதிபதிகளுக்கு பிரித்து தருவதில் இதுவரை இருந்த நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு. அதிலேதான் தலைமை நீதிபதியின் சூட்சுமம் அடங்கியுள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள். 

பல உதாரணங்கள் உண்டென்றாலும் அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.

சொல்லப்பட்டது இரண்டு வழக்குகள்.

அதிலே ஒன்று தலைமை நீதிபதி மீதே சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு.  

இன்னொன்று பாஜக தலைவர் அமித் ஷா மீதான கொலை வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரண வழக்கு.

தலைமை நீதிபதி பதுங்குவதற்கும் பாஜக பம்முவதற்கான காரணமும் யாரும் விளக்காமலேயே புரிகிறது.

முன்னாள் நீதிபதிகள் பி.பி.சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தலைமை நீதிபதி தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது நீதித்துறையின் நலனுக்கு உகந்தது அல்ல என்றும் இப்பிரச்சினைக்கு தீர்வு வரும் வரையில் ஐந்து மூத்த நீதிபதிகள் முக்கிய வழக்குகளை விசாரிப்பதே சரியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

நீதிமன்ற செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.

அப்படியெல்லாம் கிடையாது என்பதை அமித் ஷா வை விடுதலை செய்த சில நாட்களிலேயே ஒரு ஆளுனராகவும் இன்னொருவர் வெளிநாட்டு தூதராகவும் ஆனதிலிருந்தும் புரிந்து கொண்டோம்.

இப்போது உள்ளவருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமோ என்னவோ, அதற்குள் இந்த நால்வர் உள்ளே புகுந்து குழப்பி விட்டார்கள்.

நீதித்துறை காவிமயமாகிக் கொண்டிருக்கிறது என்பது இடதுசாரிகள் சில காலமாக சொல்லிக் கொண்டிருக்கிற குற்றச்சாட்டு. 

அது உண்மை என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வு நிரூபித்துள்ளது. 

அடுத்து என்ன நடக்கப் போகிறது?

சி.எஸ்.கர்ணன் மீது பிரயோகிக்கப்பட்ட அவமதிப்பு வழக்கு நால்வர் மீதும் பயன்படுத்தப்படுமா?

அல்லது 

உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் ஒன்றாக கூடி விவாதித்து முடிவெடுப்பார்களா? (பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் நீதிபதி மீது நடவடிக்கை வேண்டாம் என்று முடிவெடுத்தது போல )

அல்லது

ஒரு நாள் பரபரப்போடு முடிந்து விடுமா?

மக்கள் மன்றத்துக்கு வந்த பிரச்சினை இது.

நீதிமன்றம் அதை தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளக் கூடாது. தவறிழைத்தவர் யாராக இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நால்வர் கலகம் நன்மையில் முடிவதுதான்
நாட்டுக்கு நல்லது.

நடக்குமா?
ஆள்வோர் நடக்க விடுவார்களா?



2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. for tamilnadu transport employees strike, one judge in our high court says, you people have to do work (driving and conducting) despite of the ignorance (less salary and no pension) by tamilnadu government, otherwise leave the job. Will the same judge repeat the same words against the four supreme court judges!!!!

    ReplyDelete