Monday, March 19, 2018

நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள் ஏமாறுவார்கள் . . .




தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பெரும்பாலானவர்கள் கேள்வி கூட பட்டிராத ஒரு தொலைக்காட்சி சேனல் (அதன் பெயரை இங்கே குறிப்பிட்டு அதற்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை)  சில தினங்களுக்கு முன்பாக எல்.ஐ.சி நிறுவனம் பற்றி ஒரு அபத்தமான அவதூறு செய்தியை வெளியிட்டது.

இந்தியாவின் முதன்மையான நிதி நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் முதலீடுகள் பெரும்பாலும் மத்திய அரசின் பத்திரங்களில்தான். பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படுகிறது. ஃபார்ச்சூன் 200 என்று அழைக்கப்படுகிற  வலிமையான நிலையில் உள்ள கம்பெனிகளின் பங்குகளில் முதலீடு செய்யப்படுமே தவிர வெறும் லெட்டர்பேடு கம்பெனிகளில் எல்லாம் முதலீடு செய்யப்படாது.

பங்குச்சந்தையில் எல்.ஐ.சி யின் முதலீடு மிகவும் பழமையான (Conservative) அணுகுமுறை கொண்டதாக உள்ளதென்றும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து அது வெளி வந்தால்தான் தங்களுக்கு வசதி என்று பல பண முதலைகள் உமிழ் நீர் ஒழுக காத்திருக்கிற அளவு கடுமையானது.

எந்த ஒரு நிறுவனத்திலும் 15 % க்கும் மேலான பங்குகளை எல்.ஐ.சி வைத்திருக்கக் கூடாது என்று இன்சூரன்ஸ் ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையம் நிபந்தனை போட்டுள்ளது.  இதன் காரணமாக 15 % க்கு மேல் இருந்த சில நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்பட்டது.

அதனால் ஒரு வேளை எல்.ஐ.சி  பங்கு வைத்திருக்கிற எந்த ஒரு நிறுவனம் திவால் ஆனால் கூட  எல்.ஐ.சி யின் இழப்பு என்பது 15 % க்கு மேல் இருக்காது.  கற்பனைக்குதிரையை தட்டி விட்டு கட்டுக்கதையை பரப்பிய அந்த தொலைக்காட்சிக்கு இந்த விதியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி இருக்க இப்படி பொய்ச்செய்தி வெளியிட என்ன காரணம்?

இரண்டு காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு.

தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் இந்தியாவில் கடை விரித்து பத்தாண்டுகளுக்கு மேலான பின்பும் அவற்றால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. நம்பிக்கையின் மறு பெயர் எல்.ஐ.சி என்பதால் ஒரு சில அதி மேதாவிகளைத் தவிர வேறு யாரும் அவற்றை சீண்டுவதில்லை. இன்சூரன்ஸ் சந்தையில் (Market Share)  71 % எல்.ஐ.சி யின் வசம் உள்ளதென்றால் அதற்கடுத்த நிலையில் உள்ள நிறுவனத்தின் சந்தைப் பங்கு 2.1 % மட்டுமே. 

நடப்பு நிதியாண்டுக்கான புது வணிக இலக்கான 38,000 கோடி ரூபாய் முதல் பிரிமிய வருவாயை 15.03.2018 அன்றே எல்.ஐ.சி எட்டி விட்டது. வருடத்தின் இறுதி நாட்கள் எப்போதுமே பரபரப்பானவை. வணிகம் குவியும் காலகட்டம் அதுதான்.  ஏதேனும் வதந்தியை கிளப்பி அதன் மூலம் எல்.ஐ.சி வணிகத்தை சிதைக்க முடியுமா என்ற சதி ஒரு காரணமாக இருக்கலாம். உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் லாபத்திற்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் அல்லவா?  அந்த சதியின் கருவியாக  ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக அந்த தொலைக்காட்சி அப்படி செயல்பட்டிருக்கலாம்.

யாராலும் சீண்டப்படாத அந்த தொலைக்காட்சி தன்னை பிரபலப் படுத்திக் கொள்ள, மொக்கை தொலைகாட்சியாக இருந்தாலும் தனக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் விளம்பரங்கள் கிடைக்க இந்த பிளாக்மெயில் வேலையை செய்திருக்கலாம்.

இரண்டு காரணங்களும் கூட இணைந்தே இருக்கலாம்.

கவிதைக்கு வேண்டுமானால் பொய் அழகாக இருக்கலாம்.
ஆனால் பொருளாதாரச் செய்திகளை தருவதில் பொய் என்பது இருக்கவே கூடாது.

“திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது” என்று பட்டுக்கோட்டையார் பாடியது போல

“இது திட்டம் போட்டு வதந்தியை பரப்புகிற கூட்டம்”

எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியாதவர்கள், இப்படி வதந்திகளை உருவாக்கி அதன் மூலமாவது ஆதாயம் அடைய முடியும் என்று நினைத்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக ஏமாந்து போவார்கள். 

ஏனென்றால் அவர்களை யாரும் எப்போதும் நம்பப் போவதில்லை. 

பொய்களை பரப்புகிறவர்கள் தங்களுக்கு வைத்திருக்கிற பெயர்தான் மிகப் பெரிய காமெடி!

2 comments: