Saturday, March 24, 2018

சுட்ட படம் . .சுட்ட கவிதை

பகத்சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தோழர் வெண்புறா சரவணன் தயாரித்திருந்த படமும்

தோழர் இரா.எட்வின் அவர்கள் எழுதிய கவிதையோடு தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதியிருந்த பதிவும் 

மிகவும் கவர்ந்தது.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் 

என்ற அடிப்படையில் 

அவற்றை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



மாவீரன் பகத்சிங்!

நான் மகத்தான இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாத இதழான ”இளைஞர் முழக்கம்” பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தபோது கவிஞர், ஆசிரியர், தோழர் இரா.எட்வின் அவர்களிடம் தொடர்ந்து கவிதைகள் வாங்கி வெளியிடுவது வழக்கம்.
ஒருமுறை மார்ச் 23 க்கு பகத்சிங் குறித்து கவிதை கேட்டேன். அவர் அனுப்புவதாக சொல்லி அனுப்பவே இல்லை.லே-அவுட்க்கு முதல்நாள் தொலை பேசியில் அழைத்தேன்.
”என்ன தோழர் இன்னும் கவிதை அனுப்பல” என்றேன்.

”இல்ல ரமேஷ் அவர் குறித்து நிறைய தகவல் உள்ளது எதை எழுதுவதென குழம்பிக்கிடக்கிறேன்” என்றார்.

”சரி தோழர், பகத்சிங் தனதூ இறுதி நேரத்தில் சிறைச்சாலையிலிருந்து தூக்குமேடைக்கு போகும் போது என்ன யோசித்திருப்பான். அதை கவிதையாக்குங்கள்” என்றேன்.

அடுத்த சில நிமிடங்களில் இந்த உணர்ச்சி பிரவாகம் என் மின்னஞ்சலை தட்டியது. படித்து பாருங்கள் இந்த கவிதையை.

சாகவரம் பெற்ற கவிதை இது.

தோழர் எட்வின். உங்கள் கரங்களை இறுக பற்றுகிறேன்.



-------------------------------------------------------------
கண்கள் கலங்க
கைகள் நடுங்க ...
என்ன இது?


என் இறுதி நொடிகளின்
சாட்சி நீ
என் இறுதிப் பயணத்தின்
சக பயணி நீ


கலங்காதே
காயம் பட்டு விடும்
என் மரணத்தின் கம்பீரம்
எங்கே
ஒரு புன்னகையோடு
கதவு திற காவல் நண்பனே


மரணம் வாங்க
ஒரு மகத்தான பேரணி
என்ன பேரணி...
முழக்கமேயில்லாமல் ?
எங்கே
என்னோடு சேர்ந்து
நீயும் முழங்கு
"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "


நாளை போய் உலகு சொல்
காற்று வாங்க
கடற்கரை போகும்
குதூகலத்தோடும் ...
விருது வாங்கப் போகும்
வீரனின் மிடுக்கோடும்
மரணம் வாங்க
நடந்தான் பகத் என்று
உலகை நோக்கி
உரக்க சொல் நண்பா!


எந்தத் தேவதையும்
என் இறுதி வழியில்
பூ மாறிப் பொழியவில்லை


ஒளி வட்டம் முளைக்க
வானம் கிழித்து வந்த
வாகனமேறி
நான்
வைகுந்தம் போகவில்லை


போகிற பாதை எங்கும்
தன் சொந்தப் புன்னகையை
தூவிப் போனான்
இவனென்று சொல் நண்பா


மக்கள் போராளிகளின்
உதிரத்திலும்
வியர்வையிலும்
கசிவேன் நான்


நீ கதவில் கை வைத்த
நொடி வரைக்கும்
லெனின் படித்தேன்


உனக்கு
லெனின் தெரியுமா?


நண்பா
எனக்கே
தாமதமாய்த் தெரியும்


கிடைக்க வேண்டிய
எங்களுக்கு
லெனின் மட்டும்
கிடைத்திருந்தால்
நாங்கள் இதயத்தில்
லெனினை ஏந்தியிருப்போம்


அடடா...
போராட்டப் பாதையே
திசை மாறிப் போயிருக்கும்


தேச விடுதலையோடு
ஜனங்களின் விடுதலையும்
சேர்த்தே வந்திருக்கும்


இந்தா
இந்த முத்தத்தை
சிந்தாமல் சிதறாமல்
சேர்த்துவிட்டு
துர்கா மகளிடம்


இறுதி வரை
மாமன் உன்னை
நினைத்திருந்தான்
என்று சொல்


கருணை மனு தந்த
சங்கடம்
என் தூக்குமேடை வரைக்கும்
கூடவே தொடர்ந்ததாய்
என் தந்தையிடம் சொல்


என்ன இது
துக்கம் காட்டும்
கருப்புத் துணி
தூர எறி


பூமி பார்த்துப் பிறந்தால்
பூமி வாங்குவானாம்
பூமி பார்த்து சாகிறேன்
என் மக்கள்
பூமி மீட்கட்டும்


அதிகாரிகளே
கொடுத்து வைத்தவர்கள்:
நீங்கள்
சிரித்துக் கொண்டே
சாகும் மனிதனை
உங்களைத் தவிர
யார் பார்க்க முடியும்


"எல்லாம் முடிந்தது "
என்று சொல்ல
நான் ஒன்றும் ஏசுவல்ல
தொடங்கச் சாகிறேன்
தொடர்வார்கள் என் தோழர்கள்


விடுதலை பூமியில்
உச்சி சூரியனின்
வெயிலாய் கசிவேன் நான்


"இன்குலாப் இன்குலாப்
இன்குலாப் ஜிந்தாபாத் "

No comments:

Post a Comment